Sunday 8 July 2012

சித்தர்கள்

குரு- ஞானிகள் – யோகிகள் – சித்தர்கள் – மகான்கள் : விளக்கம்

வணக்கம் ஐயா.என் பெயர் அனிலா. நான் மலேசியாவில் வசிக்கிறேன். உங்களிடம் சில கேள்விகளின் பதிலைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது ஆன்மிகம் என்றால் என்ன??அதில் ஆன்மீகவாதிகள்என்று குறிப்பிடுபவர்கள் யார்? பிறகு குரு என்பவர் யார்?அவரின் பணி? ஞானிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்?யோகிகள் என்பவர்கள் யார்? சித்தர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? மகான் என்பவர் யார்? மேலே கூறிய அனைவருக்கும் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், இவர்கள் ஏன் இந்த ,மண்ணில் அவதரிக்க வேண்டும்? மேலும், சீர்டி சாய் பாபாவைப் பற்றி தெரிந்தால் சற்று என்னோடு பகிர்ந்துக் கொள்ளுகள்.. உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன். நன்றி. வணக்கம்.
$ $ $ $ $
அன்பு நிலாவிற்கு, நீண்ட நாள் கழித்து பதில் எழுதுகிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன். ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைக்கவே இல்லை. உங்கள் கேள்விகள் சிறிது. ஆனால் விஷயமோ பெரிது. எனக்குத் தெரிந்த வகையில் சொல்கிறேன்.
ஆன்மீகம் என்றால் என்ன?
நம்மைச் சுற்றி இருக்கும் காற்றினை நம்மால் காண முடியாது. ஆனால் உணர முடியும். இவ் விஷயத்தை உண்மை என வைத்துக் கொண்டால் ஏதோ ஒரு சக்தி நம்மைச் சூழ்ந்து இருக்கிறது என்று நம்பலாம். இந்த வகையில் ஆன்மீகம் என்பது அந்த சக்தியின் பால் நம் மனதைச் செலுத்தி, அச் சக்தியின் இருப்பை உணர்வது. சுருக்கமாய் சொல்வது என்றால் இறைச் சக்தியை உணர்வது என்பது ஆன்மீகம் எனப்படும்.
ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவர்கள் யார்?
யார் பிறருக்கு தீங்கு செய்யாமல், பிறத்தியாரின் வாழ்வு உயர உழைக்கின்றார்களோ அவர்களே ஆன்மீகவாதிகள் எனப்படுவர்
குரு என்பவர் யார்?
குரு தன்னை சிஷ்யனிடம் ஆதாரமாய் வைத்து, அவனைக் குருவாய் மலரச் செய்பவர்.
ஞானிகள் என்று சொல்லப்படுவர்கள் யார்?
ஞானிகள் என்போர் எவருக்கும் குருவாய் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையே பிறருக்கானதாய் வாழ்பவர்கள் ஞானிகள் எனப்படுவர்.
யோகிகள் என்பவர்கள் யார்?
யோகக்கலையின் மூலமாய் கடவுளை அடைய முயற்சிப்பவர்கள் யோகிகள் எனப்படுவர்.
சித்தர்கள் என்று அழைக்கப்படுவர்கள் யார்?
சித்தர்கள் என்போர் கடவுளுக்கும் நிகரானவர்கள். குடும்பவியல் வாழ்வைத் துறந்து, தன்னையே கடவுளாய் மாற்றிக் கொண்டவர்கள் சித்தர்கள். இவர்களைப் பற்றி இந்த இணைப்பில் அறியலாம்
மகான் என்பவர் யார்?
அவர் ஒரு வழிகாட்டி. ஆனால் கடவுள் அல்ல. கடவுளை அடைய பிறருக்கு வழிகாட்டுபவர்கள் மகான்கள் எனப்படுவர்.
மேற்கண்ட அனைவருக்கும் உள்ள ஒற்றுமை – மனிதர்கள் அனைவரும் கடவுளை உணர வேண்டுமென்று நினைப்பவர்கள். வேற்றுமை – இவர்களின் வழிமுறைகள் வேறுபாடுடையதாகும்.
இவர்கள் இந்த மண்ணில் ஏன் அவதரிக்க வேண்டும்?
மனிதர்களின் வாழ்வு சிறக்கவும், மனிதர்களின் பிறப்பு நோக்கத்தை உணர வைக்கவும் இவர்கள் அவதரிக்கின்றார்கள்.
சீர்டி பாபா : அவர் ஒரு மகான். மற்றபடி அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவரின் அந்த மோகனப் புன்னகையால் கவரப்பட்டவன் நான்.
- அனாதி
குறிப்பு: அனிலா, என்னைக் கிறு கிறுக்க வைத்த கேள்வியை அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி. எனக்குத் தெரிந்த வகையில் எழுதி இருக்கிறேன். இதுதான் உண்மையா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இன்னும் உணரவும், தெரியாத விஷயங்கள் எண்ணிலடங்காதவையாக இருக்கும் போது எதுவும் உண்மை என்று அறுதியிட்டுச் சொல்லவே முடியாது.